முஸ்லிம் மத வாலிபருடனான காதலை கைவிடும்படி மிரட்டியதால் மாணவி தற்கொலை


முஸ்லிம் மத வாலிபருடனான காதலை கைவிடும்படி மிரட்டியதால் மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 9 Jan 2018 4:45 AM IST (Updated: 9 Jan 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரேவில் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் மத வாலிபருடனான காதலை கை விடும்படி இந்து அமைப்பினர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

சிக்கமகளூரு,

இதுதொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே டவுன் சத்ரி மைதானம் பகுதியைச் சேர்ந்தவர் சுவர்ணா. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகள் தன்யா(வயது 20). இவர் சிக்கமகளூருவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், ஒரு முஸ்லிம் மத வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர்.

மேலும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசி வந்தனர். வாட்ஸ்-அப்பிலும் குறுஞ்செய்திகளை அனுப்பி பேசி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாணவி தன்யா திடீரென தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய காதல் விவகாரம் அவருடைய பெற்றோருக்கு தெரிய வந்ததாகவும், அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதன் காரணமாக தன்யா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இதுகுறித்து மூடிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது .இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாணவி தன்யா, முஸ்லிம் மத வாலிபரை காதலிப்பதை அப்பகுதியைச் சேர்ந்த இந்து அமைப்பினர் எதிர்த்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்து அமைப்பைச் சேர்ந்த அனில் என்ற வாலிபர் உள்பட 5 பேர், தன்யாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் தன்யா மற்றும் அவருடைய பெற்றோரை அழைத்து கடுமையாக திட்டி உள்ளனர். மேலும் காதலை உடனடியாக கைவிட்டு விடும்படி தன்யாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டலை மீறி காதலை தொடர்ந்தால், முஸ்லிம் மத வாலிபரை காதலிப்பதை பகிரங்கப்படுத்துவோம் என்றும், அந்த தகவலை வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவ விட்டு விடுவோம் என்றும் கூறி தன்யாவை 5 பேரும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மாணவி தன்யா செய்வதறியாது கவலையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் மாணவி தன்யா முஸ்லிம் மத வாலிபரை காதலிப்பது பற்றியும், மேலும் அவரைப் பற்றி சில அவதூறான கருத்துகளையும் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் சிலர் பரவ விட்டுள்ளனர்.

இதுபற்றி அறிந்த தன்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். முஸ்லிம் மத வாலிபரை காதலித்ததால் தன்னை இந்து அமைப்பினர் மிரட்டியதாலும், தன்னைப்பற்றி அவதூறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டதாலும் மாணவி தன்யா தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது. இதனால் மாணவி தன்யாவை தற்கொலைக்கு தூண்டியதாக இந்து அமைப்பைச் சேர்ந்த அனிலை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் அவருடைய தொடர்புடைய 4 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுமட்டுமல்லாமல் மாணவி தன்யா பற்றி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளை பரப்பியவர்களையும், அந்த தகவல்களை மற்றவர்களுக்கு பகிர்ந்தவர்களையும் கைது செய்ய உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை தெரிவித்தார்.

Next Story