தூத்துக்குடியில், கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட கல்லூரி பேராசிரியர் உள்பட 6 வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட கல்லூரி பேராசிரியர் உள்பட 6 வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொசுப்புழுக்கள் கண்டறியப்பட்ட கல்லூரி பேராசிரியர் உள்பட 6 வீட்டு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கொசு ஒழிப்பு பணிதூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இங்கு 350 தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர்கள், 60 மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் நகர்நல அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கைமாநகராட்சி பகுதியில், கடந்த 2 நாட்களில் சுகாதாரமற்ற நிலையில் உள்ள வீடுகளுக்கும், கொசுப்புழு கண்டறியப்பட்ட வீடுகளுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது போன்ற ஆய்வுகளில் கொசு புழுக்கள் அல்லது நோய் பரப்பும் கிருமிகள் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கலெக்டர் ஆய்வுஇந்த நிலையில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், மேற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் கந்தன் காலனி பகுதியில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கல்லூரி பேராசிரியர் உள்பட 6 பேரின் வீடுகளில் கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போன்று உதவி கலெக்டர்(பயிற்சி) சரவணன் குறிஞ்சிநகரிலும், துணை ஆட்சியர்(பயிற்சி) லாவண்யா அண்ணாநகர் 5–வது தெருவிலும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கீதா கிருஷ்ணராஜபுரம், அன்னை வேளாங்கண்ணி நகரிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சேகர் சுந்தர்நகர், கோயில்பிள்ளைநகர் ஆகிய பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.