கிழக்கு புறவழிச்சாலை பணி 80 சதவீதம் நிறைவு: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்


கிழக்கு புறவழிச்சாலை பணி 80 சதவீதம் நிறைவு: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2018 3:15 AM IST (Updated: 10 Jan 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி கிழக்கு புறவழிச்சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து சப்–கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி உடுமலை ரோடு திப்பம்பட்டி முதல் கோவை ரோடு குள்ளக்காபாளையம் வரை கிழக்கு புறவழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ரூ.20 கோடியே 63 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது.

ஒக்கிலிபாளையம், குள்ளக்காபாளையம், தொப்பம்பட்டி, அனுப்பர்பாளையம், திப்பம்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக சாலை அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள 3.75 மீட்டர் ஒரு வழிச்சாலையை 7 மீட்டருக்கு அகலப்படுத்தப்படுகிறது. மேலும் வளைவான பகுதியில் கூடுதலாக 5.5 மீட்டர் அகலப்படுத்தப்படுகிறது.

திப்பம்பட்டி முதல் குள்ளக்காபாளையம் பிரிவு வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் 8 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முழுமையாக முடிந்து விட்டன. மீதமுள்ள 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருவழிச்சாலையில் ஒரு பகுதியில் மட்டும் சாலை பணிகள் மேற்கொள்ள வேண்டிய உள்ளது. கிழக்கு புறவழிச்சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

இதற்காக 4 ஆயிரத்து 643 சதுர மீட்டர் தூரத்துக்கு அரசு மற்றும் தனியார் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே தனியாரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று விட்டது. இதற்காக நில உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். சப்–கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நில அளவை தொடர்பான ஆட்சேபணைகளை நில உரிமையாளர்கள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக 13 பேர் மனுக்களை வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர். கூட்டத்தில் கோவை உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா ஹரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலங்கள்) புஷ்பா, தாசில்தார் செல்வபாண்டியன், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார், சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரன், தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயசித்ரா, கோட்டூர் மண்டல துணை தாசில்தார் சசிரேகா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கூறியதாவது:–

பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நகரில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்தல், கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தனியார் நில உரிமையாளர்களிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிக்கு மட்டும் ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதில் கோவை ரோடு சக்தி மில்லில் இருந்து ஆர்.பொன்னாபுரம், நல்லூர் வழியாக பாலக்காடு ரோட்டை அடைந்து, ஜமீன் ஊத்துக்குளி மீன் கரை ரோட்டிற்கு செல்லும் வகையில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதேபோன்று கிழக்கு புறவழிச்சாலை உடுமலை ரோடு திப்பம்பட்டி முதல் கோவை ரோடு குள்ளக்காபாளையம் வரை 5 கிராமங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.

கிழக்கு புறவழிச்சாலை பணிக்கு தனியாரிடம் இருந்து 4 ஆயிரத்து 206 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது 1 ஏக்கர் 3 சென்ட் நிலம். இதற்காக நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு அரசு வழிகாட்டி மதிப்பில் இருந்து 2 மடங்கு கூடுதலாக வழங்கப்படும்.

கட்டிடங்கள், கழிப்பிடம், கழிவுநீர் தொட்டி ஆகியவற்றை பொதுப்பணித்துறை மூலம் அளவீடு செய்து உரிய இழப்பீடு வழங்கப்படும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. 13 பேர் நில அளவையில் பிரச்சினை உள்ளதாக மனு கொடுத்தனர். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்க பணிகள் இன்னும் 2 மாதத்தில் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story