தாண்டிக்குடி அருகே காட்டுயானை தாக்கி பெண் சாவு விவசாயிகள் சாலை மறியல்
தாண்டிக்குடி அருகே காட்டுயானை தாக்கியதில் பெண் பரிதாபமாக இறந்தார்.
பெரும்பாறை,
திண்டுக்கல் மாவட்டம், தாண்டிக்குடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி மூக்கம்மாள் (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் தாண்டிக்குடி அருகேயுள்ள பெருங்கானல் பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது காட்டுயானை ஒன்று அந்த தோட்டத்துக்குள் புகுந்தது. அந்த யானையை பார்த்ததும் மூக்கம்மாள் தப்பியோட முயன்றார். ஆனால் யானை அவரை விடாமல் துரத்தி சென்று தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த மூக்கம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அதன் பின்னர் அந்த யானை அருகேயுள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
சம்பவம் குறித்து தகவலறிந்த வத்தலக்குண்டு வனசரகர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மூக்கம்மாளின் உடலை விவசாயிகள் கைப்பற்றி, டோலி மூலம் தாண்டிக்குடி–வத்தலக்குண்டு சாலையில் கப்ளாபட்டி பிரிவு என்னுமிடத்தில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது யானையை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்ட வன அலுவலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். யானையால் சேதம் அடைந்த விவசாய நிலங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தாண்டிக்குடி போலீசார் அங்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காட்டுயானை தாக்கி கூலித்தொழிலாளி மூக்கம்மாள் இறந்ததால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.