திண்டுக்கல்லில், ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று 60 சதவீத பஸ்கள் ஓடின.
திண்டுக்கல்,
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4–ந்தேதி தொடங்கிய இந்த வேலைநிறுத்த போராட்டம் 6–வது நாளாக நேற்றும் நீடித்தது. தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்–அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். ஐகோர்ட்டும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.
ஆனால் அதனை ஏற்க மறுத்து போக்குவரத்து தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை போக்குவரத்து ஊழியர்கள் தினமும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், மவுன போராட்டம் உள்ளடவற்றை நடத்தினர். நேற்று முன்தினம் திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 9–ந்தேதி (நேற்று) மாநிலம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மாலை திண்டுக்கல் மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. 23 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள், தங்களுடைய குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். அவர்கள், புதிய ஊதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நேற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று சுமார் 60 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலான பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை கொண்டுதான் இயக்கப்பட்டன. குறைவான அளவிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் நேற்றும் தனியார் பஸ்கள் அணிவகுத்து நின்றன.
பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.காலை நேரத்தில் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால், பயணிகள் பஸ்நிலையத்தின் நூழைவுவாயில் பகுதியிலேயே காத்திருந்தனர். பஸ் நிலையத்துக்குள் பஸ் நுழைவதற்கு முன்பாகவே பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பஸ்சில் ஏறினர்.
பழனி, ஒட்டன்சத்திரம், மதுரை, தேனி, வத்தலக்குண்டு, நத்தம், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமே அதிக அளவு தனியார் பஸ்கள் ஓடின. எனவே கிராம பகுதிகளுக்கு செல்வதற்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனை பயன்படுத்திக்கொண்ட ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூலித்து கிராம பகுதிகளுக்கு ஆட்டோக்களை இயக்கினர். இதனால் ஆட்டோ டிரைவர்களுக்கு கல்லா கட்டியது.