மாவட்டத்தில் 6–வது நாளாக போராட்டம் நீடிப்பு: பணிமனைகள் முன்பு பஸ் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்
கடலூர் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே பஸ் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4–ந்தேதி முதல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 11 பணிமனைகளிலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் குறைந்த அளவில் பஸ்கள் ஓடுகிறது. அதிலும் தற்காலிக பணியாளர்களை கொண்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பணிமனைகளில் குடும்பத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று அனைத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று 6–வது நாளாக பஸ் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது. கடலூர் அரசு போக்குவரத்து பணிமனைக்கு பஸ் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக திரண்டு வந்தனர்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் போராட்டம் நடத்த பஸ் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பணிமனையில் போராட்டம் நடத்தினால் அனைவரையும் கைது செய்வோம் என்று எச்சரித்தனர். இதையடுத்து பஸ் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு பணிமனை எதிரே உள்ள சினிமா தியேட்டர் முன்பு திரண்டனர்.
அங்கு அவர்கள் குடும்பத்தோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஊதிய உயர்வு, நிலுவைத்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் தொ.மு.ச. கடலூர் பொதுச்செயலாளர் தங்க.ஆனந்தன், மண்டல தலைவர் பழனிவேல், சி.ஐ.டி.யு. பாஸ்கரன் உள்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.
இதே போல் காட்டுமன்னார்கோவில் அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தொழிலாளர்கள் கலைந்து போகாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 28 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.