ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது


ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2018 4:15 AM IST (Updated: 10 Jan 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நாகர்கோவிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ரப்பர் விவசாயத்தில் அரசுத்துறையும், தனியாரும் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு ரப்பர் கழகம் சார்பில் கீரிப்பாறை, காளிகேசம், பரளியாறு, மணலோடை, சிற்றார், குற்றியாறு, மருதம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. மேலும் கீரிப்பாறையில் அரசு ரப்பர் தொழிற்சாலையும் உள்ளது. அரசு ரப்பர் தோட்டங்கள் மற்றும் ரப்பர் தொழிற்சாலை ஆகியவற்றில் 1,500–க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி கடைசியாக 2014–ம் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அது 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்து விட்டது. அதன்பிறகு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை பேச்சுவார்த்தை நடந்தும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து ஜனவரி மாதம் 9–ந் தேதி வேலை நிறுத்தம் மற்றும் அரசு ரப்பர் கழக அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என ரப்பர் தோட்ட தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

அதன்படி நேற்று முதல் அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நேற்று காலை 10 மணிக்கு நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக நிர்வாக அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த சி.ஐ.டி.யு., தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வந்தனர்.

ஆனால் அலுவலக வளாகத்துக்குள் யாரும் செல்லமுடியாதபடி அலுவலக பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டு இருந்தது. மேலும் அங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சங்கத்தினரும், ரப்பர் தோட்ட தொழிலாளர்களும் அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்புறமிருந்து அருகில் உள்ள சாலைவரை தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதில் தொ.மு.ச. சார்பில் விஜயன், சி.ஐ.டி.யு. சார்பில் தங்கமோகன், நடராஜன், வல்சகுமார், ஐ.என்.டி.யு.சி. சார்பில் அனந்தகிருஷ்ணன், குமரன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அலுவலகம் முன்புறம் அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், தொழிற்சங்ச நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகும் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்தது. அப்போது தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கியும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் பேசினார்கள். 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இதில் 160 பெண்கள் உள்பட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் வாகனங்களில் ஏற்றி அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் பங்கேற்றதாகவும், இதனால் நேற்று அரசு ரப்பர் கழக ரப்பர் தோட்டங்களில் ரப்பர் பால் வெட்டும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார்.


Next Story