தொடர்ந்து ஓட்டுவதற்கு அதிகாரிகள் நிர்ப்பந்தம்: சேலத்தில் தற்காலிக டிரைவர்கள் பஸ்சை இயக்க மறுத்து ஓட்டம்
தொடர்ந்து ஓட்டுவதற்கு அதிகாரிகள் நிர்ப்பந்தம் செய்ததால் சேலத்தில் தற்காலிக டிரைவர்கள் பஸ்சை இயக்க மறுத்து ஓட்டம் பிடித்தனர்.
சேலம்,
அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு தொடர்பாக அரசு தரப்பில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, தமிழகத்தில் பஸ்சை இயக்க மறுத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
சேலம் மாவட்டத்திலும் தொடர்ந்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 6–வது நாளாக நீடித்தது. சேலம் ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று மாலை போக்குவரத்து பணிமனை முன்பு குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர்.
சேலம், தர்மபுரி மண்டலத்தில் 13 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5,800 பேருக்கு விளக்கம் கேட்டு அதிகாரிகள் தரப்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்துக்கழக அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாட்டின் பேரில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 750 தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பணியில் இல்லாத தொழிலாளர்களின் எண்ணிக்கையில் 5 மடங்கு குறைவாகவே தற்காலிக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து விட்டு 90 சதவீத பஸ்கள் இயக்கப்படுவதாக உண்மைக்கு மாறான தகவல்களை அதிகாரிகள் பரப்பி வருவதாக தொழிற்சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.
மேலும் தற்காலிக டிரைவர்களுக்கு முறையான அனுபவம் இல்லாததால் பஸ்களை இயக்கி, பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையை அதிகாரிகள் உருவாக்கி வருவதாகவும் தொழிற்சங்கத்தினர் கடுமையாக சாடினர்.
பணிமனையில் இருந்து பஸ்களை வெளியே எடுக்க தொழிலாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள், வட்டார போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தற்காலிக டிரைவர்கள் மூலம் அவற்றை வெளியே எடுக்க செய்து சேலம் புதிய பஸ் நிலையத்தில் கொண்டு விட செய்தனர். சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு, ஜான்சன்பேட்டை, எருமாப்பாளையம், மெய்யனூர் உள்ளிட்ட பணிமனையில் இருந்து பெரும்பாலான பஸ்கள் புதிய பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கும் வகையில், போலீசாரும் புதிய பஸ் நிலையத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். தனியார் பஸ்களிலேயே பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டினர். ஆனால் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவில்லா பெட்டியில் நிற்கக்கூட இடம் இன்றி பயணிகள் சென்றதை பார்க்க முடிந்தது.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை 11 மணியளவில் தற்காலிக டிரைவர்கள் 4 பேர் பணி முடிந்து இறங்கினர். அவர்களை அங்கிருந்த அதிகாரிகள், தொடர்ந்து இயக்கினால் கூடுதல் அலவன்சு கிடைக்கும் என தெரிவித்து மீண்டும் பஸ்சை இயக்க நிர்ப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்காலிக டிரைவர்கள் தங்களால் முடியாது எனக்கூறி பஸ் நிலையத்தில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
மேலும் சில தற்காலிக டிரைவர்கள், பஸ் நிலையத்தில் இருந்து பஸ்சை திருப்ப முடியாமல் திணறினர். சிலர் பஸ்சை திருப்பியபோது அங்கிருந்த பிளாட்பாரத்தில் இடித்து சேதமானது.
அதேவேளையில் சேலம் மாநகரில் டவுன் பஸ்கள் வழக்கம்போல ஓடின. கூடுதலாக நீண்டதூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் பஸ்களும் நேற்று நகர பஸ்களாக மாற்றப்பட்டு தற்காலிக டிரைவர்களால் இயக்கப்பட்டன. பழைய பஸ் நிலையம், கன்னங்குறிச்சி, அடிவாரம், ஜங்சன் என பேப்பரில் எழுதி கண்ணாடியில் ஒட்டி, எக்ஸ்பிரஸ் பஸ்கள் டவுன் பஸ்களாக இயக்கப்பட்டன.
அதாவது கோவை, சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட நீண்ட தூர எக்ஸ்பிரஸ் பஸ்கள், டவுன் பஸ்களாக இயங்கின. சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 6–வது நாளாக 60 சதவீத அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை என்றும், தொழிலாளர்களின் போராட்டம் வலுத்து வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே போராட்டத்தை கைவிட தொழிற்சங்கத்தினர் தொடர்ந்து மறுத்து வருவதால், நேற்று அதிகாலை 4 மணிக்கு சூரமங்கலம் போலீசார், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சி.ஐ.டி.யு. மத்திய தொழிற்சங்க துணை பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், துணைத்தலைவர் கிருஷ்ணன், பாட்டாளி தொழிற்சங்க தலைவர் ராஜேந்திரன், தொ.மு.ச. தொழிற்சங்க நிர்வாகி செந்தில் ஆகிய 4 பேரையும் அவர்களின் வீடுபுகுந்து போலீஸ் நிலையத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் போராட்டம் தொடர்பாக எழுதி வாங்கி கொண்டு காலை 8 மணிக்கு போலீசார் விடுவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘‘தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்க பல வழிகளில் அரசு முயற்சி செய்து வருகிறது. அதன் ஒருபகுதியாக அதிகாரிகள் நோட்டீசு வழங்கினர். ஆனால், தொழிலாளர்கள் உறுதியாக இருந்ததால் வேலைக்கு செல்லவில்லை. தற்போது போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டல் விடுத்து பார்க்கிறார்கள். போராட்டத்தையொட்டி பொது சொத்திற்கு சேதம் விளைவிக்க மாட்டோம் என எங்களிடம் போலீசார் எழுதி வாங்கி கொண்டனர். எப்போதும் போல எங்கள் போராட்டம் அமைதியான வழியில் தொடரும்‘‘ என்றனர்.