தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து பீதரில் முழு அடைப்பு போராட்டம்


தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து பீதரில் முழு அடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2018 5:30 AM IST (Updated: 10 Jan 2018 5:30 AM IST)
t-max-icont-min-icon

தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்து பீதரில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. வாகனங்கள் மீது கல்வீசப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினார்கள்.

பெங்களூரு,

விஜயாப்புரா புறநகரில் தலித் வகுப்பை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கடந்த ஆண்டு (2017) டிசம்பர் 19-ந் தேதி மர்மநபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டாள். கடந்த சில நாட்களுக்கு முன்பு மராட்டியத்தில் நடந்த மோதலில் தலித் வகுப்பை சேர்ந்த ஒருவர் கொலை செய்யப்பட்டார். இதனால், அங்கு கலவரம் வெடித்தது.

இந்த நிலையில் தலித் மக்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறையை கண்டித்து பீதரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு தலித் அமைப்பினர் அறிவித்து இருந்தனர். அதன்படி நேற்று பீதரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. அவர்கள் பீதர் நகரில் ஊர்வலமாக சென்றனர்.

அப்போது ஊர்வலத்தின்போது அவர்கள் வலுக்கட்டாயமாக அங்கு திறந்திருந்த கடைகளை அடைக்க கூறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு உருவானது. மேலும், சிலர் டவுனில் நிறுத்தப்பட்டு இருந்த கார்களின் மீது கற்களை வீசினார்கள். இதில் கார்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஆயுர்வேதிக் கல்லூரி மீதும் மர்மநபர்கள் கல்வீசி தாக்கினார்கள். இதனால் கல்லூரியில் இருந்த கண்ணாடிகளும் உடைந்தன.

சிலர் சாலைகளில் டயர்களை போட்டு தீவைத்தனர். சிலர் அரசு அலுவலகங்களின் கதவுகளை அடைக்க முயன்றனர். இந்த நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும், அரசு அலுவலகங்கள் முன்பு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

முன்னதாக, நேற்று காலையில் சிறிது நேரம் திறந்து இருந்த கடைகள், ஓட்டல்கள் உடனடியாக அடைக்கப்பட்டன. இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் ஆட்டோக்கள் ஓடவில்லை. அரசு, தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட கலெக்டர் விடுமுறை அளித்து உத்தரவிட்டார். இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் பீதர் நகரில் சாலைகள், பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பீதரில் இருந்து தெலுங்கானா மற்றும் ஆந்திராவுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இதன் காரணமாக பீதரில் நேற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

அத்துடன் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு குறித்து அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். இந்த புகார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பீதர் டவுனில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story