தாய்– தங்கையுடன் பெண் தபால் அதிகாரி தற்கொலை நிச்சயித்த பிறகு திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் விபரீத முடிவு
நிச்சயித்த பிறகு திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் பெண் தபால் அதிகாரி, தாய்– தங்கையுடன் தற்கொலை செய்து கொண்டார்.
வாசுதேவநல்லூர்,
நிச்சயித்த பிறகு திருமணத்துக்கு காதலன் மறுத்ததால் பெண் தபால் அதிகாரி, தாய்– தங்கையுடன் தற்கொலை செய்து கொண்டார்.
வாசுதேவநல்லூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–
பெண் தபால் அதிகாரிநெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் பழனி. அவருடைய மனைவி சீதா (வயது 55). இவர்களுக்கு சொர்ணம் (30), பத்மா (20) ஆகிய 2 மகள்கள். சொர்ணம் அங்குள்ள தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். பழனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சீதா தன்னுடைய 2 மகள்களுடன் வசித்து வந்தார்.
நேற்று காலையில் சீதா வசிக்கும் பகுதியில் தெருக்குழாயில் தண்ணீர் வந்தது. தண்ணீர் பிடிப்பதற்காக சீதாவின் வீட்டுக்கதவை அக்கம் பக்கத்தினர் தட்டினர். நீண்ட நேரம் ஆகியும் சீதாவின் வீட்டுக்கதவு திறக்கப்படவில்லை. உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வாசுதேவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வீட்டுக்குள் பிணங்கள்சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சீதாவின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. சீதா, அவருடைய மகள்கள் சொர்ணம், பத்மா ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளியபடி பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல் அருகில் விஷ பாட்டில் கிடந்தது. 3 பேரின் உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் தபால் அதிகாரி சொர்ணம், தன்னுடைய தாய்– தங்கையுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கடிதம் சிக்கியதுபோலீஸ் விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேல்சாமியை, சொர்ணம் காதலித்துள்ளார். இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பிறகு வேல்சாமிக்கு, வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த சொர்ணம், தனது தாய்– தங்கையுடன் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மேலும் சொர்ணம் தனது கைப்பட எழுதி வைத்த கடிதம் ஒன்றும் சிக்கி உள்ளது. இதை வைத்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.