கோவை மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


கோவை மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Jan 2018 4:15 AM IST (Updated: 11 Jan 2018 4:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் இயக்கும் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளது. மேலும் நிரந்தர டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு தினமும் ரூ.100 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

கோவை,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நேற்று 7–வது நாளாக நீடித்தது. இதனால் பஸ் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. எனவே இதை சமாளிக்க தற்காலிக டிரைவர்களை போக்குவரத்து அதிகாரிகள் அதிக அளவில் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அரசு பஸ்களை இயக்க டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தேவை என்று போக்குவரத்து அதிகாரிகள் ஆங்காங்கே போர்டுகளை வைத்துள்ளனர்.

 இதை தொடர்ந்து அரசு பஸ்களை இயக்க வரும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கிய மறுநாள் அரசு பஸ்களை இயக்க யாரும் முன்வரவில்லை. முதல் 2 நாளில் 60 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் தற்காலிக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து நேற்று வரை 400 டிரைவர்கள் மற்றும் 320 கண்டக்டர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.


இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

 கோவை மாவட்டத்தில் நேற்று வரை 400 தற்காலிக டிரைவர்களும், 320 கண்டக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் மொத்தம் ஆயிரத்து 71 பஸ்கள் உள்ளன. இதில் நேற்று வரை 618 பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில் டவுன்பஸ்கள் 400. வெளியூர் செல்லும் பஸ்கள் 218. நேற்று மொத்தம் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதவிர தனியார் மற்றும் மினி பஸ்களை கூடுதலாக இயக்குமாறு கூறியுள்ளோம். இதன் மூலம் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடியும். மேலும் எந்த வழித்தடத்தில் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த வழித்தடத்தில் நிலைமைக்கேற்ப பஸ்களை திருப்பிவிட அனைத்து பஸ் நிலையங்களிலும் போக்குவரத்து அலுவலர்கள் பணியில் உள்ளனர்.

 மேலும் போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் நிரந்தர டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அவர்கள வாங்கும் சம்பளம் தவிர கூடுதலாக தினமும் ரூ.100 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இவவாறு அவர் கூறினார்.

 கோவையில் பயணிகள் சிரமப்படாத அளவிற்கு பஸ்கள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து அதிகாரிகள் கூறினாலும் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. கோவை சாய்பாபாகாலனி மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஊட்டி செல்லும் பஸ் நிலையத்திற்கு தினமும் 100 டவுன் பஸ்கள் வந்து செல்லும். ஆனால் நேற்று 20 பஸ்கள் தான் வந்தாகவும், ஊட்டி செல்வதற்காக 75 பஸ்கள் தினமும் வரும் என்றும் ஆனால் நேற்று 20 பஸ்கள் தான் வந்தன என்றும் பயணிகள் தெரிவித்தனர்.ஊட்டிக்கு பஸ்கள் புறப்பட்டு செல்லாததால் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பஸ் நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Next Story