அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 7-வது நாளாக போராட்டம்


அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் 7-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:30 AM IST (Updated: 11 Jan 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நேற்று 7-வது நாளாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பணிக்கு திரும்புமாறு 1,600 பேருக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, பொன்னமராவதி, இலுப்பூர், ஆலங்குடி, அறந்தாங்கி, கந்தர்வகோட்டை உள்பட போக்குவரத்து பணிமனைகளில் தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வெளியூர், உள்ளூர் செல்லும் பயணிகள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனிடையே தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை நியமனம் செய்து குறைவான பஸ்கள் இயக்கப்பட்டன. 7-வது நாள் நடந்த இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று புதுக்கோட்டை புதிய பஸ்நிலையத்தில் காலையில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

எச்சரிக்கை நோட்டீசு

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பணிக்கு திரும்ப அனைத்து தொழிலாளர்களுக்கு செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பப்பட்டது. இதன் பிறகும் தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாமல் இருந்ததால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சுமார் 1,600 பேருக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. நோட்டீசில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நீங்கள் உடனே வேலைக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னவாசல் பகுதியில் இயக்கப்பட்ட அரசு பஸ்சின் கண்ணாடியை, அரசு பஸ் கண்டக்டர் பெருமாள் உடைத்து சேதப்படுத்தினார். இதுதொடர்பாக அன்னவாசல் போலீசார் பெருமாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது துறைரீதியான நடவடிக்கையாக நேற்று பெருமாள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

முற்றுகையிட முயற்சி

இதற்கிடையில் நேற்று அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தொ.மு.ச. மண்டல செயலாளர் வேலுச்சாமி தலைமையில் புதுக்கோட்டை தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர். ஆனால் போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். தொடர்ந்து தடையை மீறி போராட்டம் நடத்த வந்தர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

Next Story