தாண்டிக்குடி அருகே, காட்டுயானை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு நிதி உதவி
தாண்டிக்குடி அருகே காட்டுயானை தாக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிதி உதவியை வனத்துறையினர் வழங்கினர்.
பெரும்பாறை,
பெரும்பாறை அருகே உள்ள தாண்டிக்குடி கருப்பச்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மூக்கம்மாள் (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தாண்டிக்குடி அருகேயுள்ள பெருங்கானல் பகுதியில் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுயானை தாக்கி சம்பவ இடத்திலேயே மூக்கம்மாள் இறந்தார்.
இதே போல் காட்டுயானை தாக்கி அடிக்கடி உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியும், மாவட்ட வன அலுவலர் சம்பவ இடத்துக்கு நேரில் வரவேண்டும் என்று தாண்டிக்குடியில் கப்பலாபட்டி பிரிவு என்னுமிடத்தில் உறவினர்களும், விவசாயிகளும் மூக்கம்மாளின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடந்தது. அதன் பின்னர் அதிகாலையில் வனத்துறையினரும், போலீசாரும் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
நேற்று காலையில் மூக்கம்மாள் உடலை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து கருணை தொகையாக ரூ.50 ஆயிரம் நிதி உதவியை வத்தலக்குண்டு வனச்சரகர் செந்தில்குமார், வனவர் அரிவழகன் ஆகியோர் நேரில் சென்று மூக்கம்மாளின் குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினர்.
மேலும் மூக்கம்மாளின் குடும்பத்துக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண தொகையை விரைவில் பெற்று தருவதாக அவர்கள் தெரிவித்தனர்.