வத்தலக்குண்டு அருகே போராட்டத்தால் வேலை பறிபோய்விடும் என்று மனமுடைந்த அரசு பஸ் கண்டக்டர் தற்கொலை
வத்தலக்குண்டு அருகே போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் வேலை பறிபோய் விடும் என்று மனமுடைந்த அரசு பஸ் கண்டக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வத்தலக்குண்டு,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்லம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 55). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தில் நிர்வாகியாகவும் பொறுப்பு வகித்து வந்தார். இவருடைய மனைவி மணிமேகலை. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மதுரை பைபாஸ் ரோட்டிலுள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் செல்வம் தனது குடும்பத்துடன் பங்கேற்றார்.
அதன் பின்னர் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரை விட்டு, விட்டு வெளியே சென்ற செல்வம் திரும்பி வரவில்லை. அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள மேலஅச்சனம்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் வேட்டி, சட்டை அணிந்து ஒருவர் பிணமாக கிடப்பதாக விருவீடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கண்ணாகாந்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் ஏற்கனவே மாயமான கண்டக்டர் செல்வம் என்றும், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து அவருடைய குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் உடலை பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
விருவீடு போலீஸ் நிலையத்தில் அவருடைய மனைவி மணிமேகலை கொடுத்த புகாரில், வேலைநிறுத்த போராட்டத்தால் கடந்த 6 நாட்களாக அவர் சரியாக சாப்பிடவில்லை. இரவில் தூங்காமல் வேலை பறிபோய்விடுமோ என்று புலம்பிக் கொண்டிருந்தார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தால் வேலை பறிபோகும் என மனமுடைந்து விஷம் குடித்து கண்டக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.