கோவையில் மூதாட்டியை கொன்று 17 பவுன் நகை கொள்ளை இறுதிச்சடங்கு செய்யும் போது அம்பலமானது
கோவையில் வீட்டுக்குள் பிணமாக கிடந்த மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு செய்யும் போது, அவரை கொலை செய்து 17 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது அம்பலமானது.
பேரூர்,
கோவை செல்வபுரம் பேரூர் மெயின்ரோடு, தேவேந்திரவீதியை சேர்ந்தவர் ராமாயம்மாள் (வயது75). இவருக்கு 2 மகன்களும், 5 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். ராமாயம்மாள் தனக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருக்கு, மகன் வீட்டில் இருந்து 3 வேளையும் உணவு அனுப்பி வைக்கப்படும்.
ராமாயம்மாள் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிவரை பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு படுக்க சென்றுவிட்டார். நேற்று காலை 10.30 மணியாகியும் அவர் வெளியே வராததால் உறவினர்கள் கதவை திறந்து வீட்டுக்குள் சென்றனர். அங்கு ராமாயம்மாள் கட்டிலில் இறந்து கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனாலும், வயதானதால் ராமாயம்மாள் இறந்து விட்டதாக கருதி அவருடைய மகன்கள் மற்றும் மகள்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக உறவினர்கள் வீட்டு முன்பு திரண்டனர். இயற்கை மரணம் என்று கருதியதால் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. உடலை வைப்பதற்காக குளிர்பதன பெட்டியும் வீட்டுக்கு வரவழைக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமாயம்மாள் அணிந்து இருந்த தங்கநகைகளை காணாததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்தனர். அதன்பிறகு குளிர்பதன பெட்டியில் வைப்பதற்காக ராமாயம்மாள் உடலை தூக்கியபோது, காது பகுதியில் ரத்தம் வடிந்ததும், வளையல் அணிந்து இருந்த மணிக்கட்டு பகுதியில் ரத்த காயங்கள் இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே பீரோவில் பார்த்த போது அங்கும் நகைகள் இல்லை. இதனால் மூதாட்டி கொலை செய்து நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீஸ் துணை கமிஷனர் பெருமாள் மற்றும் செல்வபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், மூதாட்டியின் முகத்தை தலையணையால் அமுக்கி மூச்சுத்திணறடித்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்து இருந்த 17 பவுன் தங்கநகைகள் கொள்ளையடித்து விட்டு சென்றதும் தெரியவந்தது.
மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்டு நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் இந்த கொலையை செய்துள்ளனர். ஆனால் இந்த கொலையில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கம்மல் மற்றும் மூக்குத்தியை கழற்ற முடியாததால் கொலையாளிகள் விட்டுச்சென்றுள்ளனர். இதையடுத்து போலீஸ் மோப்பநாய் கொண்டு வரப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்க வில்லை.
இந்த கொலை குறித்து போலீஸ் கமிஷனர் பெரியய்யா கூறும்போது, கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் கழுத்தில் காயம் இல்லை. தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத்திணறடித்து கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. பிரேத பரிசோதனையில் கொலைக்கான விவரங்கள் தெரியவரும். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
மூதாட்டியை கொன்று நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.