இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி கிராம தலைவர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம்,
திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட புதுக்குடி கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டோர் கிராம தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
புதுக்குடி கிராமத்தில் பட்டம்கட்டி சமூகத்தை சேர்ந்த ஏராளமான குடும்பத்தினர் சுமார் 70 ஆண்டுகளாக மூன்று தலைமுறைகளாக குடியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். வீட்டு வரி, குடிநீர், மின்சார கட்டணம் செலுத்தி வருகிறோம். நாங்கள் குடியிருக்கும் இடத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.