இறுதிபட்டியல் வெளியீடு: தஞ்சை மாவட்டத்தில் 19 லட்சம் வாக்காளர்கள்


இறுதிபட்டியல் வெளியீடு: தஞ்சை மாவட்டத்தில் 19 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 11 Jan 2018 4:15 AM IST (Updated: 11 Jan 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்த வாக்காளர்கள் 19 லட்சம் பேர் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அண்ணாதுரை நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, தஞ்சை மாவட்டத்தில் 3-10-2017 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 57 ஆயிரத்து 526 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 93 ஆயிரத்து 55 பெண் வாக்காளர்களும், 73 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆகக்கூடுதல் 19 லட்சத்து 50 ஆயிரத்து 654 வாக்காளர்களாகும்.

19 லட்சம் வாக்காளர்கள்

இதையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 3-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்திடக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் மீது கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதி அடிப்படையில் புதிதாக 19 ஆயிரத்து 808 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 339 ஆண் வாக்காளர்களும், 10 ஆயிரத்து 450 பெண் வாக்காளர்களும், 19 மூன்றாம் பாலினத்து வாக்காளர்களும் ஆவர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 19 லட்சத்து 15 ஆயிரத்து 848 ஆகும். இதில் 9 லட்சத்து 40 ஆயிரத்து 970 ஆண் வாக்காளர்களும், 9 லட்சத்து 74 ஆயிரத்து 786 பெண் வாக்காளர்களும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 92.

உறுதி செய்யுங்கள்

இறுதி வாக்காளர் பட்டியல் நகல் 8 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மற்றும் தாலுகா அலுவலகங்கள், வருவாய் கோட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிலும் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும். வருகிற 26-ந்தேதி அன்று நடைபெறவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்படும். எனவே, அனைத்து வாக்காளர்களும், தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறேதுமின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை வாக்காளர் பட்டியலைப் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முரசொலி, பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கேசவன், காங்கிரஸ் கட்சி மாவட்ட பொருளாளர் பழனியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செல்வக்குமார், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் சிவக்குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கரிகால்சோழன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார், தாசில்தார்கள் தங்கபிரபாகரன், ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story