தற்காலிக பணியாளர்கள் மூலம் தஞ்சையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன


தற்காலிக பணியாளர்கள் மூலம் தஞ்சையில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 11 Jan 2018 4:15 AM IST (Updated: 11 Jan 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நேற்று தற்காலிக பணியாளர்கள் மூலம் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டதால் சிறப்பு ரெயில்கள் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சாவூர்,

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல் போன்ற போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் முதல்நாள் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதையடுத்து தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம், நாகை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய 6 மண்டலங்கள் உள்ளன.

தற்காலிக பணியாளர்கள்

இந்த 6 மண்டலங்களிலும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து கும்பகோணம் கோட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. 95 சதவீதத்துக்கும் மேல் பஸ்கள் இயக்கப்பட்டதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து தஞ்சை- திருச்சி இடையே சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

வெறிச்சோடியது

ஆனால் நேற்று தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் சிறப்பு ரெயில்களில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மற்ற ரெயில்களில் வழக்கம் போல கூட்டம் காணப் பட்டது. 

Next Story