காரைக்குடியில் எச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயற்சி நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் கைது


காரைக்குடியில் எச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயற்சி நாம் தமிழர் கட்சியினர் 60 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2018 4:35 AM IST (Updated: 11 Jan 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் உள்ள பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா வீட்டை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்குடி,

காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில், ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சிற்கு விமர்சனம் செய்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனையொட்டி எச்.ராஜா வீட்டின் முன்பும், கண்டனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம் தலைமையில் பல்கலைக்கழக சாலையில் ஒன்று கூடினர். பின்னர் கையில் கொடிகளுடன் எச்.ராஜாவிற்கு எதிரான கோ‌ஷங்களை எழுப்பியபடி அவரது வீட்டை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

இதனை அறிந்த போலீசார் நாம் தமிழர் கட்சியினரை பல்கலைக்கழக வளைவு அருகே தடுத்து நிறுத்தினர். ஆனாலும் சிலர் போலீசாரின் தடுப்பினை மீறி எச்.ராஜா வீட்டை நோக்கி சென்றனர். ஆனால் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு நாம் தமிழர் கட்சியினரை பிடித்தனர். இதனால் காரைக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம், சிவகங்கை மாவட்ட பரப்புரையாளர் ராவணன் உள்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story