2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடல் சீற்றத்தால் பைபர் படகுகள் கவிழ்ந்தன


2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடல் சீற்றத்தால் பைபர் படகுகள் கவிழ்ந்தன
x
தினத்தந்தி 11 Jan 2018 4:30 AM IST (Updated: 11 Jan 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார், தரங்கம்பாடி பகுதியில் 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும், பூம்புகார் பகுதியில் கடல் சீற்றத்தால் பைபர் படகுகள் கவிழ்ந்தன.

திருவெண்காடு,

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சீர்காழி தாலுகாவுக்கு உட்பட்ட பூம்புகார், வாணகிரி, கீழமூவர்க்கரை, நாயக்கர்குப்பம், திருமுல்லைவாசல், மடவாமேடு, கூழையாறு, தொடுவாய், ஓலக்கொட்டாயமேடு, சின்ன கொட்டாயமேடு, கொடியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றமாக உள்ளது. இதனால் கடந்த 2 நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. பழையாறு துறைமுகத்திலும், பூம்புகார் கடற்கரையோரமும் மீனவர்கள் பாதுகாப்பாக படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதனிடையே நேற்று முன்தினம் பூம்புகார் பகுதிக்கு உட்பட்ட ஒரு சில மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடித்துவிட்டு மீனவர்கள் கரைக்கு திரும்பி வரும்போது கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் 2 பைபர் படகுகள் கவிழ்ந்தன. அப்போது பின்னால் பைபர் படகில் வந்த சக மீனவர்கள், கவிழ்ந்த பைபர் படகில் இருந்த மீனவர்களை காப்பாற்றினர். பின்னர் கடலில் கவிழ்ந்த பைபர் படகுகளையும் மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் மீனவர்கள் காயம் இன்றி தப்பினர்.

இதேபோல் கடல் சீற்றமாக இருந்ததால் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், சந்திரபாடி, சின்னூர்பேட்டை, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, வெள்ளக்கோவில், சின்னங்குடி, சின்னூர்பேட்டை ஆகிய பகுதியை சார்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 2 நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள், தங்களது படகுகளை கடற்கரையோரம் நிறுத்தி வைத்து இருந்தனர். மீன்பிடிக்க செல்ல முடியாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story