அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்


அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது 5 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்
x
தினத்தந்தி 11 Jan 2018 5:04 AM IST (Updated: 11 Jan 2018 5:04 AM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருத்தணி அருகேயுள்ள நெட்டேரிக்கண்டிகை 2–வது தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் ஐ.டி.ஐ. படித்து விட்டு வேலை தேடி வந்தார். இதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த பெத்திராஜூ (63) தனக்கு எம்.எல்.ஏ., மந்திரிகள் மற்றும் முதல்–அமைச்சரின் உதவியாளரை நன்கு தெரியும் எனக்கூறி வினோத்குமாரிடம் அறிமுகம் செய்து கொண்டார்.

இதை நம்பிய வினோத்குமார் 2013–ம் ஆண்டு தனக்கு அரசு வேலை வாங்கித்தர வேண்டும் என பெத்திராஜூவிடம் கூறினார். அவரும் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சத்தை வினோத்குமாரிடம் இருந்து பெற்றார். பின்னர் பெத்திராஜூ தமிழ்நாடு அரசு என முத்திரையிட்ட வேலைக்கான நியமன ஆணையை வினோத்குமாரிடம் கொடுத்தார். ஆனால் அது போலியானது என பின்னர் தெரியவந்தது.

இதனால் ஏமாற்றம் அடைந்த வினோத்குமார், மோசடி செய்த பெத்திராஜூ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சேகர், இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, ராஜேஸ்வரி மற்றும் போலீசார் தலைமறைவாக உள்ள பெத்திராஜூவை தேடி வந்தனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெத்திராஜூவை சென்னையில் நேற்று போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story