சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளை தாக்கிய வாலிபர் கைது


சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2018 5:12 AM IST (Updated: 11 Jan 2018 5:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது பயணி ஒருவர், குடியுரிமை அதிகாரிகள் நடத்தும் சோதனையை தனது செல்போனில் படம்பிடித்தார். இதை பார்த்த குடியுரிமை அதிகாரிகள் ஆராமுதன், குரிநாத் சிங் ஆகியோர் அந்த பயணியை செல்போனில் படம்பிடிக்கவிடாமல் தடுத்ததுடன், எதற்காக படம் பிடிக்கிறீர்கள்? என தட்டிக்கேட்டனர்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அந்த பயணி, குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த பயணி, குடியுரிமை அதிகாரிகள் இருவரையும் சரமாரியாக தாக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சகபயணிகள், தகராறில் ஈடுபட்ட அந்த பயணியை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து வைத்தனர்.

அவர் தாக்கியதில் காயம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் ஆராமுதன், குரிநாத் சிங் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுபற்றி விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, போதையில் குடியுரிமை அதிகாரிகளை தாக்கியதாக அந்த பயணியை கைது செய்து விசாரித்தனர். அதில் அவர், கடலூரைச் சேர்ந்த அசோக் (வயது 35) என்பதும், துபாயில் வேலை செய்துவரும் அவர், விடுமுறையில் ஊருக்கு வந்து இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து அவர் மீது அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், அதிகாரிகளை தாக்கியதாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story