கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 8–வது நாளாக காத்திருப்பு போராட்டம்


கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 8–வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2018 5:57 AM IST (Updated: 11 Jan 2018 5:57 AM IST)
t-max-icont-min-icon

7–வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 8–வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.

பாகூர்,

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கும் அமல்படுத்தக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் கடந்த 6 மாதமாக பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதுதொடர்பாக உள்ளாட்சி துறை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனால் தற்போது நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 8–வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுவை மாநிலம் அரியாங்குப்பம், பாகூர், வில்லியனூர், நெட்டப்பாக்கம், திருபுவனை உள்பட பல்வேறு அலுவலங்களில் முன்பு ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மகாலிங்கம் தலைமை தாங்கினார். சின்னசாமி முன்னிலை வகித்தார். அரியாங்குப்பத்தில் ஏ.ஐ.டி.யு.சி. பொறுப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சம்மேளன பொறுப்பாளர் ரவி, கூட்டமைப்பு பொறுப்பாளர் முருகையன் உள்பட ஊழியர்கள் பங்கேற்றனர்.

வில்லியனூரில் கொம்யூன் பஞ்சாயத்து சங்க தலைவர் மாறன் தலைமையில் போராட்டம் நடந்தது. ஊழியர்களின் போராட்டம் காரணமாக நாள்தோறும் நடைபெறும் பிறப்பு–இறப்பு, திருமணம் பதிவு செய்தல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.


Next Story