கவர்னர் கிரண்பெடி ஒப்புதல்; அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும், புதுவையில் இலவச பொங்கல் பொருட்கள்
அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச பொங்கல் பொருட்கள் வழங்க கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த பொருட்களை நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரி,
புதுவையில் ஆண்டுதோறும் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச பொருட்கள் வழங்குவது வழக்கம்.
அதாவது தீபாவளி பண்டிகைக்கு தலா 2 கிலோ சர்க்கரையும், பொங்கல் பண்டிகைக்கு அரிசி, வெல்லம் என பொங்கலிட தேவையான 6 வகையான பொருட்களும் வழங்கப்படும்.
கடந்த தீபாவளி பண்டிகையின்போது சர்க்கரை வழங்குவது தொடர்பான கோப்புக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளிக்க மறுத்து அதை திருப்பி அனுப்பினார். அதேபோல் இலவச துணி கொள்முதலில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக இலவச துணியும் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக கவர்னர் மாளிகை- அமைச்சரவை இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்தநிலையில் தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களுக்கு இலவச பொருட்களை வழங்குவது குறித்து கவர்னரின் ஒப்புதலுக்கு அரசு கோப்பினை தயாரித்து அனுப்பியது. அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்பியதாக கூறப்பட்டது. கவர்னரின் இந்த நடவடிக்கை ஆட்சியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களும் அதிருப்தி அடைந்தனர்.
கவர்னரின் இந்த நடவடிக்கை குறித்து விவாதிக்க காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை தொடர்ந்து கவர்னரை அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அப்போது பொங்கலுக்கு இலவச பொருட்கள் வழங்குவது குறித்து அவர்கள் கவர்னரிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என்பது தொடர்பாக நிச்சயமற்ற நிலைமை இருந்து வந்தது. இந்தநிலையில் பொங்கல் பொருட்கள் வழங்க அனுமதி அளித்து கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை கடந்த 8-ந் தேதி அனுப்பிய 2 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா 20 கிலோ அரிசி, மஞ்சள் நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 10 கிலோ அரிசி என வழங்கப்படும். நிதிநிலை இருப்பை பொறுத்து இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்தலாம். மேலும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் பட்டியலை வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் வெளிப்படைத் தன்மையுடன் முடிக்க வேண்டும்.
2018-19ம் ஆண்டுக்கான பொங்கல் இலவச பொருட் கள் திட்டத்தை(விதி 9) சிறிய மாற்றத்துடன் அமல்படுத்தலாம். அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச பொருட்களை வழங்கலாம். இதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்கான நிதியை மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம்தான் வழங்க வேண்டும். இந்த திட்டத்தினை புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் செயல்படுத்தலாம்.
குடிமைப்பொருள் வழங்கல் துறையின் மூலம் பொருட்கள் வழங்கும் போது துறையின் செயலாளர், இயக்குனர் ஆகியோர் பொருட்களின் தரத்தை உறுதி செய்த பின்னரே கொள்முதல் செய்ய வேண்டும். பொருட்களை கொள்முதல் செய்வதற்கு முன் ஆலையில் பரீட்சார்த்த முறையில் மாதிரி சோதனை செய்ய வேண்டும். வேறு திட்டங்களுக்கான நிதியை இந்த திட்டங்களுக்கு மாற்றி பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.