10 கிலோ கஞ்சா ஆந்திர வாலிபர் கைது
குவைத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பார்சலில் 10 கிலோ கஞ்சா இருந்தது. அதனை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றி, இதுதொடர்பாக ஆந்திர வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு குவைத்தில் ஒரு மாதத்திற்கு முன் ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உணவு பொருட்கள் என குறிப்பிட்டு ஒரு பார்சல் வந்தது. நீண்ட நாட்களாக அந்த பார்சலை யாரும் எடுக்கவராததால் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.
ஒரு மாதமாக யாரும் எடுக்க வராத பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பார்சலில் 5 பாக்கெட்டுகள் இருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவற்றை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ 400 கிராம் கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த பார்சல் யார் பெயருக்கு வந்தது என அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, கடந்த மாதம் ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் இருந்து குவைத்துக்கு சென்று விசா பிரச்சினையால் உடனே சென்னைக்கு திரும்பிவந்ததும், அவரது உடைமைகள் மறுநாள் சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது.
அவரது உடைமையில் தான் கஞ்சா இருந்ததால் அந்த வாலிபர் அதனை வாங்க முன்வரவில்லை என தெரிந்தது. இதையடுத்து சித்தூரை சேர்ந்த அந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சாவை யாருக்காக கடத்திச் சென்றார்? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.