ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் வெங்கடேஷ் குமார் (வயது 55). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று முன்தினம் காலை சுமார் 10.20 மணியளவில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பேசினார். அப்போது அவர் ‘என் பெயர் வெங்கடேஷ். எனது மகள் திருமணத்துக்காக நிதி நிறுவன அதிபர் ஒருவரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றேன். இந்த கடன் தொடர்பாக எனக்கு அவர் தொல்லை கொடுத்து வருகிறார். இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன்‘ என கூறிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் உடனடியாக அந்த செல்போன் எண்ணுக்கு போலீசார் போன் செய்தனர். ஆனால், அந்த போன் ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும், போலீசார் சிரமப்பட்டு அந்த செல்போன் எண் அன்னபூர்னேஸ்வரி நகரில் இருப்பதை கண்டுப்பிடித்தனர். உடனடியாக கோனனகுண்டே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் காலை 11 மணியளவில் வெங்கடேசின் வீட்டை கண்டுபிடித்தனர். அப்போது வீட்டு கதவு அடைக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வெங்கடேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துபோன வெங்கடேசுக்கு ராதம்மா என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் வெங்கடேஷ் குமாரின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோனனகுண்டே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.