பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சி உறவினர்கள் போராட்டம்


பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்ததால் அதிர்ச்சி உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2018 3:45 AM IST (Updated: 12 Jan 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

பிரசவத்தின்போது குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சின்னேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கும் துமகூரு மாவட்டம் துருவகெரே அருகே கொண்டஞ்சி கிராமத்தை சேர்ந்தவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் மஞ்சுளா 2–வது முறையாக கர்ப்பமானார். இதனால் மஞ்சுளா சின்னேனஹள்ளியில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மஞ்சுளாவுக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து மஞ்சுளாவை அவருடைய குடும்பத்தினர் ஹாசன் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மஞ்சுளாவுக்கு சுகப்பிரசவம் பார்க்கலாம் என்று டாக்டர்கள் கூறினார்கள். ஆனால், அவருடைய குடும்பத்தினர், மஞ்சுளா மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவருக்கு ஆபரே‌ஷன் செய்யும்படியும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து மஞ்சுளாவுக்கு டாக்டர்கள் பிரசவம் பார்த்தனர். அப்போது, அவருக்கு குழந்தை இறந்து பிறந்ததாக தெரிகிறது. இதுகுறித்து டாக்டர்கள், மஞ்சுளாவின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், குழந்தையையும், மஞ்சுளாவையும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், அதற்குள் டாக்டர்கள் மறுத்ததாக தெரிகிறது. இதனால் மஞ்சுளாவின் குடும்பத்தினர் டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாக்டர்கள் அரசு ஆஸ்பத்திரி காவலாளிகள் மூலம் அவர்களை வெளியே அனுப்பியதாக தெரிகிறது.

இதையடுத்து மஞ்சுளாவின் உறவினர்கள் ஹாசன் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு வந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், மஞ்சுளா மிகவும் சோர்வாக இருந்தார். இதனால் அவருக்கு ஆபரே‌ஷன் மூலம் குழந்தையை எடுக்க வேண்டும் என்று கூறினோம். ஆனால் தற்போது குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். டாக்டர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது இதுபற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக டாக்டர்கள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மஞ்சுளாவின் குடும்பத்தினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story