பெயரில் ராமன் செயலில் ராவணன் சித்தராமையா பற்றி எடியூரப்பா பகிரங்க குற்றச்சாட்டு


பெயரில் ராமன் செயலில் ராவணன் சித்தராமையா பற்றி எடியூரப்பா பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 12 Jan 2018 5:15 AM IST (Updated: 12 Jan 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

‘‘பெயரில் ராமன். செயலில் ராவணன்’’ என்று சித்தராமையா பற்றி எடியூரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா நேற்று துமகூரு மாவட்டத்தில் பரிவர்த்தனா யாத்தரையை நடத்தினார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

‘‘கர்நாடகத்தில் சாமானிய மக்களின் நலனை பாதுகாக்க வேண்டிய சித்தராமையா பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறார். சித்தராமையாவின் பெயரில் ராமனுக்கு பதில் ராவணன் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். அவருக்கு சித்தராமையா என்று பெயர் வைத்தது துரதிருஷ்டவசமானது. பெயரில் ராமனை வைத்துக் கொண்டு சித்தராமையா ராவணனை போல் நடந்து கொள்கிறார்.

கர்நாடகத்தில் அரசு அதிகாரிகள் இடமாற்றத்தில் நடந்த ஊழல்களை ஐகோர்ட்டு கண்டித்துள்ளது. ஆயினும் சித்தராமையா உள்பட மந்திரிகள் யாரும் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. எங்கள் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளை இந்த அரசு தேவை இல்லாமல் தொந்தரவு செய்கிறது. இதை நிறுத்த வேண்டும். சித்தராமையா ‘துக்ளக் தர்பார்’ நடத்துகிறார். இதற்கு முடிவுகட்ட வேண்டும்.

இன்னும் 3 மாதங்களுக்கு பிறகு எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். அப்போது உங்களின் நிலையை சற்று யோசித்து பாருங்கள். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்காமல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்வதாக சித்தராமையா சொல்கிறார். இது சித்தராமையாவால் சாத்தியமா? பிப்ரவரி 4–ந் தேதி பெங்களூருவில் பரிவர்த்தனா யாத்திரை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

கொல்லர் சமுதாயத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். இந்த திசையில் நாங்கள் முயற்சி செய்வோம். சட்டத்துறை மந்திரியின் தொகுதியிலேயே அரசு அலுவலகங்களில் ஊழல் மிதமிஞ்சி போய்விட்டது. அந்த மந்திரியின் ஆதரவாளர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.’’ இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story