குமராட்சி பகுதியில் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்


குமராட்சி பகுதியில் மழை: அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:15 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

குமராட்சி பகுதியில் பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சிதம்பரம்,

குமராட்சி அருகே அத்திப்பட்டு, நளன்புத்தூர், மேலப்பருத்திக்குடி, கீழப்பருத்திக்குடி, வெள்ளையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பளவில் சம்பா நெல் பயிரிட்டு பராமரித்து வந்தனர். அவை நல்ல முறையில் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குமராட்சி பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் அறுவடைக்கு தயராக இருந்த வயல்வெளிக்குள் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து நளன்புத்தூரை சேர்ந்த சரவணன் என்கிற விவசாயி கூறியதாவது:-

நஷ்டம்

பெரும் செலவு செய்து என்னை போன்று விவசாயிகள் பலரும் சம்பா சாகுபடி செய்தனர்.

பயிர்கள் நன்கு வளர்ந்து இருந்ததால் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தோம். இந்த நிலையில் 2 நாட்கள் பெய்த மழையால் நளன்புத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்த நஷ்டத்தை எவ்வாறு நாங்கள் சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதால் எங்களது நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியது. தற்போது மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் நாங்கள் தவித்து வருகிறோம். இதை தவிர்க்க விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியை மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story