கடலூர் உழவர் சந்தைக்குள் கரும்பு விற்க வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பு


கடலூர் உழவர் சந்தைக்குள் கரும்பு விற்க வியாபாரிகளுக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 12 Jan 2018 4:30 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் உழவர் சந்தைக்குள் கரும்புகளை கொண்டு வந்து விற்க வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அதிகாரிகளுடன், வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

கடலூர் அண்ணாபாலம் அருகில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர்சந்தையில் கடலூர் தாலுகாவுக்குட்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியில் விளையும் காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து எவ்வித இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக் கிழமை) கொண்டாடப்பட உள்ளதால் விவசாயிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, பூ, பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

வாக்குவாதம்

இதற்கிடையில் நேற்று வியாபாரிகள் சிலர் சரக்கு வாகனத்தில் கரும்புகள், மஞ்சள் கொத்துகளை ஏற்றி உழவர் சந்தையில் வைத்து விற்பனை செய்ய முயற்சி செய்தனர். இதை பார்த்த உழவர் சந்தை வேளாண்மை அதிகாரிகள், வியாபாரிகள் உழவர் சந்தைக்குள் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்ய அனுமதி கிடையாது. விவசாயிகள் மட்டுமே பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று மறுத்தனர்.

இதனால் வேளாண்மை அதிகாரிகளிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அருகில் அரசு போக்குவரத்து பணிமனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் வேளாண்மை அதிகாரிகள், வியாபாரிகளுக்கு இங்கு அனுமதியில்லை என்று கூறி, அவர்கள் கொண்டு வந்த சரக்கு வாகனத்தை திருப்பி அனுப்பி விட்டனர். இந்த சம்பவத்தால் உழவர் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story