சங்க நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா


சங்க நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 12 Jan 2018 4:15 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர் சங்க நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடுமலை,

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுகதார ஆய்வாளர் ஒருவரை உடுமலை நகராட்சிக்கு இடமாற்றம் செய்து, நகராட்சிகளின் நிர்வாக ஆணையாளர் (சென்னை) உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அந்த ஆய்வாளர் உடுமலை நகராட்சிக்கு பணியில் சேரவந்துள்ளார். ஆனால் அவருக்கு உடுமலை நகராட்சியில் ஆணையாளரால் பணியிடம் ஒதுக்கித்தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாக ஆணையாளர் அந்த சுகாதார ஆய்வாளரை மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு மாறுதல் செய்து கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளார். மேலும் உடுமலை நகராட்சி ஊழியர் ஒருவர் கடந்த 15 நாட்களுக்குமுன்பு உடுமலை நகராட்சியினால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நகராட்சி நிர்வாக ஆணையாளரின் உத்தரவை அமல்படுத்தாததை கண்டித்தும், நகராட்சி ஊழியர் ஒருவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் 11-ந்தேதி ( நேற்று) நடைபெறும் அன்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று மாலை உடுமலை நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது அரசு ஊழியர் சங்கம் சார்பில் நகராட்சி அலுவலக சுவரில் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதற்கு நகராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி ஒருவரை, நகராட்சி அலுவலர் (பொறுப்பு) ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. அப்போது நகராட்சி நகர்நல அலுவலர் அருண் இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர்.

அப்போது அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகியை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தை கைவிடுமாறு அரசு ஊழியர்களை கேட்டுக்கொண்டனர். இதை தொடர்ந்து அதிவிரைவு படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

பின்னர் ஆர்.டி.ஓ.அசோகன் தலைமையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தாசில்தார் தங்கவேல், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்குபிறகும் பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்ததால் அரசு ஊழியர்கள் நகராட்சி அலுவலக வளாகத்திற்குள் அடுப்பு மூட்டி சமையல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story