ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் ரூ.23 லட்சம் மதிப்பில் நகை, பணம் கொள்ளை


ஆஸ்பத்திரி மேலாளர் வீட்டில் ரூ.23 லட்சம் மதிப்பில் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 12 Jan 2018 4:30 AM IST (Updated: 12 Jan 2018 2:58 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அழகாபுரம் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி முதுநிலை மேலாளர் வீட்டில் ரூ.23 லட்சம் மதிப்பில் நகை, பணம் கொள்ளை போனது. இதேபோல் ஆவின் அதிகாரி வீட்டிலும் மர்ம ஆசாமிகள் நகை, பணத்தை அள்ளிச் சென்றனர்.

சேலம்,

சேலம் கோரிமேடு அருகே உள்ள ஏ.டி.சி. நகர் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார்(வயது 55). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதுநிலை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெய்சி. இவர் சேலம் தளவாய்பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்று கிறார்.

இவர்களுடைய மகன் கிஷோர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு ஆங்கிலமும், மகள் நிஷா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. விலங்கியல் முதலாமாண்டும் படித்து வருகின்றனர். நேற்று காலை வழக்கம் போல் ஜெய்சி வேலைக்கு சென்று விட்டார். பொங்கல் பண்டிகையையொட்டி மகளை சேலம் அழைத்து வருவதற்காக அசோக்குமார் கோவைக்கு புறப்பட்டு சென்றார்.

பள்ளி முடிந்து மாலையில் ஜெய்சி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை கமிஷனர் தங்கதுரை மற்றும் அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அவரிடம் முதற்கட்டமாக 200 பவுன் நகை, ரூ.22 லட்சம் கொள்ளை போனதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் வீட்டின் சில இடங்களில் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு உடனடியாக தெரியவில்லை. எவ்வளவு நகை, பணம் கொள்ளை போனது குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு மோப்பநாய் மேகா வரவழைக்கப்பட்டது.

இது மோப்பம் பிடித்து வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள ஒரு கியாஸ் குடோன் வரை ஓடி சென்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்களும் சம்பவம் நடந்த வீட்டுக்கு வந்து கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் 64 பவுன் நகையும், ரூ.10 லட்சமும் கொள்ளை போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.23 லட்சம் ஆகும்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (48). இவர் சேலம் ஆவின் நிறுவனத்தில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜெயலட்சுமி தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். இவர்கள் இருவரும் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டனர்.

இந்த நேரத்தில் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து, வீட்டில் இருந்த 10 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். இந்த இரு கொள்ளை தொடர்பாக அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story