அரசு திட்டங்களை தமிழக கவர்னர் ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை கிரண்பெடி பேட்டி


அரசு திட்டங்களை தமிழக கவர்னர் ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை கிரண்பெடி பேட்டி
x
தினத்தந்தி 12 Jan 2018 4:30 AM IST (Updated: 12 Jan 2018 3:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கவர்னர், அரசின் திட்டங்களை ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை என்று கிரண்பெடி கூறினார்.

திருச்சி,

திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் ராஜாஜி அறக்கட்டளை சார்பில் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பொது வாழ்க்கையில் தூய்மையாக இருந்தவர் ராஜாஜி. பொது வாழ்வில் இருப்பவர்கள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வித்திறன், தொழில்நுட்ப திறனை கற்றுக்கொள்வதோடு நிற்காமல், வாழ்க்கை திறனையும் வளர்த்துக்கொண்டு துணிச்சலோடு இருக்க வேண்டும். பலனை எதிர்பாராமல் கடமையை செய்யவேண்டும். ஒரு செயலை செய்யும் முன்பு, தெளிவாக முடிவு செய்யவேண்டும். முடிவு செய்ததை செயலாற்ற வேண்டும். செயலாற்றியதை மக்கள் முன்பு எடுத்துச்சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய அறிவு தேவை. அதேபோன்று நேர்மையாக இருக்க வேண்டும்.

நேர்மையை கையாள தவறியதால் சமீபத்தில் ஒரு மிகப்பெரிய கம்ப்யூட்டர் நிறுவனம் மூடப்பட்டது. எனவே அனைவருக்கும் தனித்திறமையும், நல் ஒழுக்கமும் தேவை. புதுச்சேரி கவர்னர் மாளிகையில் தினமும் 3 மணி நேரம் மக்களை சந்தித்து குறைகள் கேட்டு வருகிறேன். கவர்னர் மாளிகை, மக்கள் மாளிகையாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த கவர்னர்கள் கூட்டத்தில் புதுச்சேரி போன்று மற்ற மாநிலங்களிலும் கவர்னர் மாளிகை செயல்பட வேண்டும் என்ற கருத்து பரிமாறப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க தற்போது கையெழுத்து போட்டுள்ளேன். யார், யாருக்கு வழங்க வேண்டும் என்று ஆராய்ந்து தான் கையெழுத்து போட்டேன். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும். அனைவருக்கும் கொடுப்பத்தில் அர்த்தம் இல்லை.

வருகிற ஆண்டுகளில் மேலும் ஆராய்ந்து, உண்மையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தான் நலத்திட்ட உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக கவர்னர், அரசின் திட்டங்களை ஆய்வு நடத்துவதில் தவறு இல்லை. அவர் பொதுமக்களோடு தொடர்பில் இருப்பது தவறு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story