நண்பர்களுக்கு வாட்ஸ்– அப்பில் தகவல் அனுப்பிவிட்டு போலீஸ் அதிகாரி தற்கொலை முயற்சி
நண்பர்களுக்கு வாட்ஸ்–அப்பில் தகவல் அனுப்பிவிட்டு, தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற போலீஸ் அதிகாரிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வசாய்,
பால்கர் மாவட்டம் வசாய் மேற்கு மூல்காவ் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் கோசாவி(வயது50). பால்கர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உதவி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுக்கு வாட்ஸ்–அப்பில், தன்னுடைய உயர் அதிகாரிகளின் தொந்தரவால் தான் தற்கொலை செய்யப்போவதாக தகவல் அனுப்பி உள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அவரது வீட்டிற்கு பதறி அடித்தபடி ஓடிவந்தனர். அப்போது, வீட்டின் படுக்கை அறையில் மகேஷ் கோசாவி மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
டாக்டர்கள் பரிசோதனையில் மகேஷ் கோசாவி அதிகளவில் தூக்கமாத்திரைகளை தின்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உயர் அதிகாரிகளின் தொல்லையால் தனது கணவர் தற்கொலைக்கு முயன்றதாக மகேஷ் கோசாவியின் மனைவியும் கூறியுள்ளார். ஆனால் இதற்கு பால்கர் போலீஸ் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து உள்ளனர்.
ஒரு பிரச்சினை தொடர்பாக மகேஷ் கோசாவி மீது துறைரீதியான விசாரணை நடந்து வருவதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர், உயர் போலீஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து, தற்கொலைக்கு முயன்றிருப்பதாக பால்கர் போலீஸ் சூப்பிரண்டு மஞ்சுநாத் சிங்கே கூறினார்.