கவர்னர் மாளிகையில் அன்பழகன் எம்.எல்.ஏ. தர்ணா
புதுவை கவர்னர் கிரண்பெடி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக கூறி கவர்னர் மாளிகையில் அன்பழகன் எம்.எல்.ஏ. தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி அவ்வப்போது சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அதன்படி நேற்று ஒரு கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதில், பாஸ்கர் எம்.எல்.ஏ. புதிதாக சொகுசு கார் வாங்கி இருப்பதாகவும், அதற்கு நம்பர் பிளேட் பொருத்த சென்ற போது அதில் இருந்த கருப்புநிற ஸ்டிக்கர்களை அகற்றுமாறு போக்குவரத்து துறை ஊழியர்கள் கூறியதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குண்டர்களுடன் சென்று பாஸ்கர் எம்.எல்.ஏ. அதிகாரிகளை மிரட்டியதாகவும் புகார் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுபற்றி தெரியவந்ததும் பாஸ்கர் எம்.எல்.ஏ.வின் அண்ணான சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., இதுகுறித்து கவர்னரிடம் கேட்பதற்காக நேற்று பிற்பகல் 12.30 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்றார். அப்போது கவர்னர் கிரண்பெடி அங்கு இல்லை. இதைத்தொடர்ந்து கவர்னரின் செயலாளர், தனிச்செயலாளரை சந்தித்து பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ. கவர்னர் மாளிகையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் கவர்னர் மாளிகைக்கு விரைந்து வந்தார். ராதாகிருஷ்ணன் எம்.பி.யும் அங்கு வந்தார். அவர்கள் அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் பேசி சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ. போராட்டத்தை கைவிட்டு மதியம் 1.15 மணிக்கு கவர்னர் மாளிகையைவிட்டு வெளியே வந்தார். அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:–
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் கவர்னரின் செயல்பாடு உள்ளது. இதுவரை 10 எம்.எல்.ஏ.க்கள் மீது அவதூறான செய்திகளை கவர்னர் வெளியிட்டுள்ளார். இத்தகைய செய்திகளை கவர்னர் அவரது செல்போனில் இருந்து தானே அனுப்பி வருகிறார். மலிவு விளம்பரத்துக்காக இதை செய்து வருகிறார்.
எனது தம்பியான பாஸ்கர் எம்.எல்.ஏ. புதிய சொகுசு கார் வாங்கியுள்ளதாகவும், அதில் இருந்த கருப்பு ஸ்டிக்கரை அகற்றுவது தொடர்பாக போக்குவரத்து துறை ஊழியர்களுடன் குண்டர்களை அழைத்துச் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும் அவர் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். எனது தம்பி புதிய கார் எதுவும் வாங்கவில்லை.
7 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய காரின் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் சேதமடைந்ததால் அதை மாற்ற போக்குவரத்து துறைக்கு அனுப்பி உள்ளார். ஆனால் அங்கிருந்த ஊழியர்கள் காரில் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் இருப்பதாகவும், அதை அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். உண்மையில் காரில் கருப்பு ஸ்டிக்கரே இல்லை. அது கூலிங்கிளாஸ் கண்ணாடி ஆகும்.
இதைத்தொடர்ந்து பாஸ்கர் எம்.எல்.ஏ. நேரில் சென்று அதிகாரிகளை பார்த்து விளக்கி நம்பர் பிளேட்டை மாற்றி வந்துள்ளார். இது 8 நாட்களுக்கு முன்பு நடந்தது. ஆனால் இப்போது கவர்னர் திடீரென்று, குண்டர்களுடன் சென்று தகராறில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ. மீது புகார் என்றால் சம்பந்தப்பட்டவரை அழைத்து பேசலாம். அதைவிடுத்து திட்டமிட்டு அவமதிக்கிறார். பொங்கல் இலவச பொருட்கள் வழங்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து நாங்கள் சட்டசபை வளாகத்தில் போராட்டம் நடத்தினோம். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இப்போது கவர்னர் இதை செய்துள்ளார்.
கவர்னர் கிரண்பெடி டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து இங்கு கவர்னராக வந்துள்ளார். அவர் இப்போது பொய்யான தகவலை கூறியுள்ளார். இதுதொடர்பாக நியாயம் கேட்க நான் கவர்னர் மாளிகைக்கு வந்து தர்ணாவில் உட்கார்ந்தேன். ஆனால் அவர் இல்லை. கவர்னரின் செயல்பாடு தவறானது என்று அவரது செயலாளரிடம் சுட்டிக்காட்டினேன்.
என்னை ராதாகிருஷ்ணன் எம்.பி. சமதானப்படுத்தி அழைத்து வந்தார். கவர்னர் வந்ததும் அவரை மீண்டும் சந்தித்து அவரது தவறை சுட்டிக்காட்டுவேன். இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.
கவர்னர் மாளிகையை விட்டு வெளியே அன்பழகன் வந்த நிலையில் அங்கு அமைச்சர் கந்தசாமி, தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்தனர். முதல்–அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில், அன்பழகன் எம்.எல்.ஏ.வை அழைத்து செல்ல வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.