அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 8–வது நாளாக வேலைநிறுத்தம்


அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 8–வது நாளாக வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 12 Jan 2018 4:34 AM IST (Updated: 12 Jan 2018 4:34 AM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 8–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

கோவில்பட்டி,

அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 4–ந்தேதி மாலையில் இருந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 8–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நீடித்தது. இதனால் தற்காலிக ஊழியர்களையும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களையும் வைத்து பெரும்பாலான அரசு பஸ்களை இயக்கி வருகின்றனர்.

கோவில்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 68 பஸ்களில் 43 பஸ்கள் இயக்கப்பட்டன. விளாத்திகுளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 38 பஸ்களில் 30 பஸ்களும், திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 55 பஸ்களில் 34 பஸ்களும், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள 34 பஸ்களில் 20 பஸ்களும் இயக்கப்பட்டன.

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால், தனியார் பஸ்களும், மினி பஸ்களும் அதிகளவில் இயக்கப்பட்டன. எனினும் பெரும்பாலான கிராமப்புற வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படாததாலும், பல மணி நேரம் காத்திருந்து பயணம் செய்ததாலும், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நகர்ப்புறங்களில் சென்று பொங்கல் பொருட்களை வாங்கி செல்வதற்கும் கிராம மக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.


Next Story