பெரியபாளையம் அருகே வாகனம் மோதி போலீஸ்காரர் பலி
பெரியபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரிய கிளாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி. இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் விக்னேஷ்(வயது 25). இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 3–வது பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் போலீஸ்காரர் விக்னேஷ், ஜனப்பன்சத்திரம் அருகே உள்ள அத்திப்பேடு கிராமத்தில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு சென்று விட்டு இரவில் கிளாம்பாக்கம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பெரியபாளையம்–சென்னை நெடுஞ்சாலையில் தானாகுளம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் விக்னேஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
நேற்று காலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விக்னேஷ் சாலையோரம் பிணமாக கிடப்பது குறித்து பெரியபாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் எது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரர் ஒருவர் விபத்தில் பலியாகி பல மணி நேரம் கேட்பாரற்று சாலை ஓரம் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.