திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாத யாத்திரை பக்தர்கள் குவிந்து வருகின்றனர்
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர்,
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாத யாத்திரை பக்தர்கள் குவிந்தனர். தொடர்ந்து நெல்லை–திருச்செந்தூர் சாலையில் பல ஆயிரம் பக்தர்கள் நடைபயணமாக கோவிலுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
பொங்கல் பண்டிகைதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழ் கடவுள் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.
காலையில் தை மாத பிறப்பு உத்திராயண புண்ணிய காலத்தை முன்னிட்டு, சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடக்கிறது. மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடக்கிறது.
பரிவேட்டைநாளை மறுநாள் (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடக்கிறது.
மதியம் 3 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் பரிவேட்டைக்காக வெள்ளி குதிரையில் எழுந்தருளி, பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமி ரத வீதிகள், சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்கிறார்.
பக்தர்கள் குவிந்து வருகின்றனர்தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு ஊரில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்து, அவரது திருப்புகழை பாடியவாறு கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் நடைபயணமாக திருச்செந்தூர் நோக்கி வருகின்றனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து உள்ளனர்.