தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்வழிப்பாதைகளில் ஆள்இல்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில், புயல், வெள்ளம் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக, நீர்வழிப்பாதைகளில் ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில், புயல், வெள்ளம் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைக்காக, நீர்வழிப்பாதைகளில் ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
நீர்வழிப்பாதைதமிழகத்தில், புயல், வெள்ளம் பாதிப்புகளை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதன்படி, நீர்வழிப்பாதைகளில் ஆய்வு செய்து வரைபடம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆய்வு செய்யப்படுகிறது. இந்த திட்டம் ரூ.7 கோடியே 1 லட்சத்து 60 ஆயிரம் செலவில்நடத்தப்படுகிறது.
ஆள்இல்லா குட்டி விமானம்இதில் ஆள் இல்லா குட்டி விமானங்கள் மூலம் நீர் வழிப்பாதைகளில் படம் பிடிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் உள்ள அதிநவீன கேமிராவில் 48 வினாடிகளுக்கு ஒரு புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த படங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, அதன் மூலம் வரைபடம் தயாரிக்கப்படுகிறது.
முன்எச்சரிக்கைஇந்த வரைபடம் உதவியுடன் புயல், வெள்ளம் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும். அணைகள், தடுப்பணைகள் கட்டுவதற்கான இடங்களை அடையாளம் கண்டறிவது, துண்டிக்கப்பட்ட நீர்வழித்தடங்களை அறிய முடியும். வெள்ளம் ஏற்பட்டால், அந்த பகுதியை சரி செய்து வெள்ளத்தை தடுக்க முடியும். ஆக்கிரமிப்புகள், நீர் வழித்தடத்தில் உள்ள அடைப்புகளை கண்டறிய முடியும். இந்த திட்டத்தை தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு மற்றும் அண்ணா பல்கலைக்கழக வான்வெளி ஆராய்ச்சி மையம் இணைந்து செயல்படுத்துகிறது.
ஆய்வு தொடக்கம்தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி, கோரம்பள்ளம், வைப்பாறு வடிநில கோட்டங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடி காலாங்கரை பகுதியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி, ஆள் இல்லா விமானம் மூலம் நீர்வழிப்பாதைகளில் ஆய்வு பணியை தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு மகேந்திரன் உதவி கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எதிர்கால திட்டங்கள்தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி, கோரம்பள்ளம், வைப்பார் ஆகிய வடிநில கோட்டங்களில் உள்ள நீர்வழிப்பாதைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இங்கு 209.22 சதுர கிலோ மீட்டர் பரப்பில் ஆய்வு நடக்கிறது. தாமிரபரணி ஆறு 131 கிலோ மீட்டர் தூரம் ஓடி கடலில் கலக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 47 கிலோ மீட்டர் தூரம் பாய்கிறது. இதில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுகளும், மருதூர் மேலக்கால், கீழக்கால், ஸ்ரீவைகுண்டம் தென்கால், வடகால் ஆகிய 4 கால்வாய்களும் உள்ளன.
தாமிரபரணி பாசனத்தின் கீழ் உள்ள 53 குளங்களின் கரைகள், கோரம்பள்ளம் குளம், உப்பாற்று ஓடை, வைப்பார் பகுதிகளில் இந்த ஆய்வு நடக்கிறது. இது தவிர வெள்ளம் பாதிக்கக்கூடியதாக கண்டறியப்பட்டு உள்ள 36 இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகள் 45 முதல் 60 நாட்களுக்குள் முடிவடையும். இந்த படங்கள் மூலம் வரைபடம் தயாரிக்கப்படுகிறது. அந்த வரைபடம் எதிர்கால முன்எச்சரிக்கை திட்டங்கள் தயாரிக்க உதவியாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.