மாணவ–மாணவிகள் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் கலிங்கப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழாவில் வைகோ பேச்சு


மாணவ–மாணவிகள் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் கலிங்கப்பட்டி அரசு பள்ளி ஆண்டு விழாவில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 13 Jan 2018 2:00 AM IST (Updated: 12 Jan 2018 9:09 PM IST)
t-max-icont-min-icon

மாணவ–மாணவிகள் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கலிங்கப்பட்டியில் நடந்த அரசு பள்ளி ஆண்டுவிழாவில் வைகோ பேசினார்.

திருவேங்கடம்,

மாணவ–மாணவிகள் ஒழுக்கத்தை கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என கலிங்கப்பட்டியில் நடந்த அரசு பள்ளி ஆண்டுவிழாவில் வைகோ பேசினார்.

பள்ளி ஆண்டு விழா

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகா கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் அம்பிகா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பாராம் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேஷ் வரவேற்றார். மாணவ–மாணவிகளின் பரதநாட்டியம், நாடகம், சிலம்பம், கோலாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

12–ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற ஜெயராஜ் என்ற மாணவருக்கு ரூ.10 ஆயிரத்தையும், 10–ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மனோஜ் என்ற மாணவருக்கு ரூ.5 ஆயிரத்தையும் அன்னை மாரியம்மாள் நினைவாக, பள்ளியின் முன்னாள் மாணவரும், ம.தி.மு.க. பொதுச் செயலாளருமான வைகோ வழங்கினார். மேலும் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:–

ஆசிரியர்களை மதிக்க வேண்டும்

நான் படித்த இந்த கிராம பள்ளிக்கூடத்தை உயிராக மதிக்கிறேன். ஆண்டு விழாவில் கோலாட்டம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து விருது பெற்றதாக அறிந்தேன். இவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு சென்னைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன்.

சிலம்பாட்டத்தில் மாணவிகளும் கலந்துகொண்டு சிறப்பாக ஆடியது மகிழ்ச்சியை தந்தது. மாணவ– மாணவிகளாகிய நீங்கள் நன்கு படிக்க வேண்டும். தாய், தந்தை, ஆசிரியர்களையும் மதித்து, ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். பெற்றோர்கள் இதுபோன்ற விழாக்களில் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

விழாவில் நெல்லை மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் தி.மு.ராஜேந்திரன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் கல்லத்தியான் உள்பட கட்சி நிர்வாகிகள், ஆசிரிய–ஆசிரியைகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


Next Story