தனியார் தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


தனியார் தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Jan 2018 10:30 PM GMT (Updated: 12 Jan 2018 8:37 PM GMT)

திருவொற்றியூரில் உள்ள தனியார் பேட்டரி தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சாலையை முற்றுகையிட முயன்ற ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்பட அனைவரும் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் டோல்கேட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ‘எவரடி’ பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 65 வருடங்களாக செயல்பட்டு வரும் இந்த தொழிற்சாலையில் சுமார் 250 பேர் வேலை செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக இந்த தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக தெரிகிறது.

கடந்த மாதம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த மாதம் இதுவரையில் சம்பளமோ, பொங்கல் போனசோ வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்த தொழிற்சாலை வெளிமாநிலத்துக்கு மாற்றப்பட இருப்பதாகவும் தகவல் பரவியது.

இதையடுத்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள், இந்த தொழிற்சாலை திருவொற்றியூரிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும். இங்கு மீண்டும் பேட்டரி உற்பத்தியை தொடங்கி அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இந்த மாத சம்பளம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., தொழிற்சங்க தலைவர் காசிநாதன், திருவொற்றியூர் பகுதி தி.மு.க. செயலாளர் தி.மு.தனியரசு ஆகியோர் தலைமையில் நேற்று தொழிற்சாலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருவொற்றியூர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்பட அனைவரையும் கைது செய்வதாக கூறி போலீஸ் நிலையம் அழைத்துச்சென்றனர். பின்னர் அங்கு அனைவரையும் விடுதலை செய்தனர்.


Next Story