காங்கிரஸ் பா.ஜனதாவினர் போட்டி போராட்டம் தள்ளுமுள்ளு 100 பேர் கைது
சிக்கமகளூருவில், காங்கிரசாரும், பா.ஜனதாவினரும் போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதொடர்பாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதாவினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிக்கமகளூரு.
முதல்–மந்திரி சித்தராமையா ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரையும், பா.ஜனதாவினரையும் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டி பேசியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று மாநிலம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு பா.ஜனதாவினர் அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி சிக்கமகளூரு டவுன் சர்ச் ரோட்டில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் இருந்து பா.ஜனதா மாநில பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி, எம்.எல்.சி. பிரானேஷ் ஆகியோர் தலைமையில் பா.ஜனதாவினர் கடூர் மெயின்ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.
இதுகுறித்து அறிந்த சிக்கமகளூரு டவுன் போலீசார் அங்கு விரைந்து ஊர்வலமாக வந்த பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்தினர். அப்போது பா.ஜனதாவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் பா.ஜனதாவினரை தடுக்க அங்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகளை வைத்தனர். அப்போது அந்த தடுப்பு வேலிகளையும் தாண்டி பா.ஜனதாவினர் 20–க்கும் மேற்பட்ட பா.ஜனதா தொண்டர்கள் காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சித்தராமையாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அந்த சமயத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.சி. காயத்ரி மற்றும் தொண்டர்கள், பா.ஜனதாவினருக்கு எதிராக போட்டிப்போட்டு கோஷங்களை எழுப்பினர். மேலும் அவர்களும் அங்கு போட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போட்டி போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சி.டி.ரவி எம்
எல்.ஏ. உள்பட பா.ஜனதாவினர் 100–க்கும் மேற்பட்டோரை கைது செய்து அங்கிருந்து வேனில் அழைத்து சென்றனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் பசவனஹள்ளியில் உள்ள தாசில்தார் அலுவலகம் முன்பு பா.ஜனதாவினரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரி மாணவி தன்யஸ்ரீ தற்கொலையில் தொடர்புடையவர்களை பா.ஜனதாவினர் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள்.