பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு செல்ல திருப்பூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருப்பூர்,
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு நேற்று காலை முதல் பணிக்கு திரும்பினார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் அனைத்து பஸ்களும் முழுவீச்சில் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவன தொழிலாளர்கள் நேற்று சொந்த ஊர் புறப்பட்டு சென்றனர். இதற்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன.
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல் போன்ற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. காலை நேரத்தில் பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால் அரசு பஸ்களில் வெளிமாவட்ட பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள். மாநகரில் பல பகுதிகளில் இருந்து பயணிகள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார்கள். நேரம் செல்ல செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்தது.
பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக நேற்று சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்படி திருப்பூரில் இருந்து 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. திருவண்ணாமலை, சென்னை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, தேனி, திண்டுக்கல் போன்ற ஊர்களுக்கு அதிக அளவில் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
பயணிகள் சிரமம் இன்றி வரிசையாக நின்று பஸ்களில் ஏறுவதற்காக திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை வரை இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
அதுபோல் பொங்கல் பண்டிகை முடிந்ததும், சொந்த ஊரில் இருந்து திருப்பூர் வரும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்களை இயக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுபோல் திருப்பூர் பழைய பஸ் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து திருப்பூர் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் மற்றும் கடை வீதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதுபோல் கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலால் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் ஜேப்படி ஆசாமிகளை கண்காணிப்பதற்காக சாதாரண உடையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.