ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை மோடி நினைத்து பார்க்க வேண்டும்
மத்தியில் 3½ ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை மோடி நினைத்து பார்க்க வேண்டும் என்று முதல்–மந்திரி சித்தராமையா பேசினார்.
மைசூரு,
மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு, எச்.டி.கோட்டை தாலுகாக்களில் முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மு ன்தினம் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து மைசூருவுக்கு வந்த அவர் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை மைசூரு கவர்னர் மாளிகையில் வடகர்நாடக விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் சித்தராமையா கூறுகையில், மகதாயி நதிநீர் பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதற்காக அனைத்துக்கட்சி குழுவினர் டெல்லி அழைத்து செல்லப்படும் என்று உறுதி அளித்தார்.
அதன்பின்னர் சித்தராமையா மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது இல்லத்துக்கு சென்று ஓய்வு எடுத்தார். இந்த நிலையில் நேற்று காலையில் தனது இல்லத்தில் முதல்–மந்திரி சித்தராமையா ஜனதா தரிசனம் என்னும் மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தினார். இதில் கலந்துகொண்ட மக்களிடம் சித்தராமையா மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்து கொண்டார். இதையடுத்து முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பா.ஜனதாவினர் தாங்கள் பயங்கரவாதிகள், தங்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதாவினரை போலீசார் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை. சட்டசபை தேர்தலில் அவர்களை தோற்கடிப்பதன் மூலமாக பொதுமக்களே கைது செய்து வீட்டுக்கு அனுப்புவார்கள். கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பா.ஜனதா மற்றும் சங்பரிவார் அமைப்புகளின் அட்டூழியங்களை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
மக்கள் மனதில் வன்முறை, மதவாதத்தை பா.ஜனதாவினர் விதைத்து வருகிறார்கள். மக்கள் அனைவருக்கும் இது தெரியும். இப்படிப்பட்டவர்களை மக்கள் சும்மா விடமாட்டார்கள். பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு வந்து காங்கிரஸ் அரசின் குறைபாடுகள் பற்றி பேசுவதாக கூறியிருக்கிறார். ஆனால் தனது 3½ ஆண்டு கால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை பிரதமர் மோடி நினைத்து பார்க்க வேண்டும்.
மத்தியில் பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மக்கள் பட்ட அவதி, வேலையில்லா திண்டாட்டங்களை பற்றி நாங்கள் (காங்கிரஸ்) மக்களுக்கு தெரியப்படுத்துவோம். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து வருகிறேன். இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சுற்றுப்பயணம் வெற்றிக்கரமாக முடிந்துள்ளது. தேர்தல் தேதி வெளியானதும் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து முதல்–மந்திரி சித்தராமையா அங்கிருந்து மண்டியா மாவட்டம் மலவள்ளி, ஸ்ரீரங்கப்பட்டணா, கே.ஆர்.பேட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்று பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அங்கு நடந்த மாநில அரசின் சாதனை மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். மக்களுக்கு ஏராளமான நலத்திட்ட உதவிகளை சித்தராமையா வழங்கினார்.