ஆண்டாள் பற்றிய கருத்து: வைரமுத்துவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த வைரமுத்துவை கண்டித்து கும்பகோணத்தில் ஆன்மிக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம்,
12 ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் பற்றி தவறான கருத்தை தெரிவித்ததாக கூறி வைரமுத்துவை கண்டித்து நேற்று கும்பகோணத்தில் ஆன்மிக அமைப்புகள் சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ராஜகோபுர வாசலில் இருந்து ஆன்மிக அமைப்பினர் திருப்பாவை பாடல்களை பாடியபடி பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணி பல்வேறு வீதிகள் வழியாக சென்று காந்தி பூங்கா அருகே நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பகவத் கைங்கர்ய சபை தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு பிராமணர் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் வாசுதேவன், சாரங்கபாணி கோவில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் சேதுமாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜோதிமலை இறைபணி திருக்கூட்ட அமைப்பின் தலைவர் திருவடிக்குடில் சுவாமிகள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆதிவராக கைங்கர்ய சபை, திருவிடைமருதூர் மகாலிங்கசாமி சேவை குழு, மந்திர பீடேஸ்வரி பக்தர்கள் குழு, தென்பாரத கம்பமேளா மகாமக அறக்கட்டளை குழு உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். முடிவல் பகவத் கைங்கர்ய சமாஜம் செயலாளர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.