தஞ்சையில் மதுக்கடைக்கு பூட்டுப்போட முயற்சி இந்து மக்கள் கட்சியினர் 18 பேர் கைது
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கக்கோரி தஞ்சையில் மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்,
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளான நேற்று தஞ்சை மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் தஞ்சை நகர பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி மாநகர தலைவர் பாலக்குமார் தலைமையில் மாவட்ட தலைவர் சிவா, மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலையில் இந்து மக்கள் கட்சியினர் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு நகர பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடைக்கு பூட்டு போடுவதற்காக பல்வேறு கோஷங்கள் எழுப்பியபடி, பூட்டுகளை கையில் ஏந்தியபடி வந்தனர்.
இவர்களை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக்ராவ், மாவட்ட துணைத் தலைவர் சிவநேசன், ஒன்றிய தலைவர்கள் நாராயணமூர்த்தி, சூரை.சுப்பிரமணியம், நகர தலைவர் சக்திவேல், இளைஞரணி தலைவர் பிரகாஷ், நிர்வாகி வீரமணி உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளன்று அரசு மதுக்கடைகளுக்கு அரசு விடுமுறை அளித்து தமிழகஅரசு சட்டம் இயற்ற கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.