போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்: தஞ்சை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றதால் தஞ்சை மாவட்டத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடின. பணிக்கு வந்தவர்களுக்கு தொழிற்சங்கத்தினர் இனிப்பு வழங்கினர்.
தஞ்சாவூர்,
மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இணையாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த ரூ.7 ஆயிரம் கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த 4–ந் தேதி மாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் நலன் கருதி அண்ணா தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக டிரைவர்கள் தேர்வு செய்யப்பட்டு குறைந்த எண்ணிக்கையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தநிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய விகிதம் தொடர்பான பிரச்சினையை விசாரித்து தீர்வு ஏற்படுத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை மத்தியஸ்தராக நியமிப்பதாகவும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவரும் தங்களது போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து 8 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டத்தை நேற்றுமுன்தினம் போக்குவரத்து தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் நேற்றுஅதிகாலை முதல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பேரை தவிர மற்ற நிரந்தர தொழிலாளர்கள் அனைவரும் பணிமனைக்கு வந்து கையெழுத்து போட்டு பஸ்களை இயக்கினர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. நிரந்தர தொழிலாளர்கள் பணிக்கு வந்ததால் தற்காலிக பணியாளர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் உள்ள நகர்கிளை–1, நகர்கிளை–2 மற்றும் கரந்தையில் உள்ள புறநகர் கிளை ஆகியவற்றில் பணிக்கு வந்த நிரந்தர தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தினர் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தஞ்சையில் இருந்து வெளியூருக்கு சென்றவர்கள் எந்தவித சிரமமும் இன்றி பஸ்சில் பயணம் செய்தனர்.