கரியகோவில் அணையில் தண்ணீர் திறப்பு: வாய்க்கால் பாசன விவசாயிகள் எதிர்ப்பு–சாலை மறியல்
கரியகோவில் அணையில் இருந்து ஆற்றுப்பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உதவி கலெக்டரை சிறைபிடித்த வாய்க்கால் பாசன விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெத்தநாயக்கன்பாளையம்,
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ளது கரியகோவில் அணை. இந்த அணையின் மூலம் ஆற்றுப்பாசனம் மற்றும் வாய்க்கால் பாசனம் வழியாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் ஆற்றுப்பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று ஆற்றுப்பாசனத்துக்கு கரியகோவில் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று காலை 8 மணியளவில் ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன் கரியகோவில் அணையில் இருந்து ஆற்றுப்பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் அவர், அணையின் நுழைவு வாயில் பகுதிக்கு வந்தார்.
அங்கு திரண்டிருந்த வாய்க்கால் பாசன விவசாயிகள் திடீரென உதவி கலெக்டர் செல்வனை சிறைபிடித்தனர். அப்போது அவர்கள், கரியகோவில் அணையில் இருந்து ஆற்றுப்பாசனத்துக்கு தண்ணீர் திறந்தால் அந்த தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் செல்லாது. வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்தால் அனைத்து பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களும் பயன்பெறும். எனவே, வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அவர்கள் உதவி கலெக்டரை விடுவித்து, ஆற்றுப்பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாப்பநாயக்கன்பட்டியில் உள்ள கருமந்துறை–சேலம் சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதையடுத்து உதவி கலெக்டர் செல்வன், பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் ஹபி உன்னிஷா ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அதிகாரிகள், இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேசி முடிவு செய்யலாம் என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். விவசாயிகள் திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.