தென்னிந்திய நதிகளை இணைக்க வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை நடைபயணம் அனுமதி கேட்டு வழக்கு


தென்னிந்திய நதிகளை இணைக்க வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை நடைபயணம் அனுமதி கேட்டு வழக்கு
x
தினத்தந்தி 13 Jan 2018 5:15 AM IST (Updated: 13 Jan 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

தென்னிந்திய நதிகளை இணைப்பதை வலியுறுத்தி குமரி முதல் சென்னை வரை நடைபயணம் மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

பருவமழை பொய்த்துப்போனதால், கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விவசாய கடன்களை வசூலிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதை கைவிட வேண்டும். அதோடு விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். இதற்காக தனி விவசாய ஆணையம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் அறுவடை நடக்கும்போது, செலவு கணக்குகளை கருத்தில் கொண்டு பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். விவசாயத்தை காக்க தென்னிந்திய நதிகளை இணைப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, டெல்லி ஜந்தர்மந்தர் பகுதியில் 144 நாட்கள் போராடினோம்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் குமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம்.

இதற்கு அனுமதி கேட்டு கடந்த நவம்பர் 20–ந்தேதி தமிழக போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு அளித்தோம். அவர் அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடமும் மனு கொடுக்கும்படி கூறினார். இது சாத்தியம் இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திற்குள்ளும் எந்த தேதியில் செல்வோம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. எனவே 100 நாட்கள் நடைபெற உள்ள விழிப்புணர்வு பிரசார பயணத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை வருகிற 24–ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Next Story