பணத்தை விரும்பாத டீனேஜ் பருவத்தினர்
டீனேஜ் பருவத்தினர் பணத்தை விரும்பாததற்கும், மூளை முதிர்ச்சி அடையாமல் இருப்பதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவின்படி, வளரிளம் பருவம் முழுவதும் மூளை நரம்புகள் பல்வேறு பகுதிகளோடு இணைக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. இது அதிக ஊக்கத்தொகை கிடைப்பதை நோக்கி டீனேஜ் பருவத்தினர் செயல்படுவதைப் பாதிக்கிறது.
ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், ரத்த ஓட்டத்தோடு தொடர்புடைய மாற்றங்களைக் கண்டறிவதன் மூலம் மூளையின் செயல் பாடுகளை அளவிடும் ‘செயல்பாட்டு காந்த அதிர்வு உருவரை’ நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.
கணினி விளையாட்டு ஒன்றை விளையாடும்போது, 13 முதல் 20 வயது வரையான இளைஞர்களின் மூளை செயல்பாடுகள் ஸ்கேன் செய்யப்பட்டன.
விளையாடும்போது, சரியான பதில் களுக்கு ஒரு டாலர் அளிப்பு அல்லது தவறான பதில்களுக்கு 50 சென்ட் இழப்பு என்று அதிக பணத்திற்காகவும், குறைவான தொகையாக 20 டாலர் சம்பாதிப்பது அல்லது 10 சென்ட் இழப்பது என்ற விதிப்படி அவர்கள் விளையாடினர்.
இந்தத் தொகை அதிகமாக இருக்கின்றபோது, வளரிளம் பருவத்தினர் தங்களுடைய செயல்திறனை அதிகரிக்க முடிந்தது என்று இந்த ஆய்வை வழிநடத்திய கேட்டி இன்செல் தெரிவித்தார்.
ஆனால், இளம் வளரிளம் பருவத்தினர் குறைவான ஊக்கத்தொகை கிடைக்கும் விளையாட்டுகளைப் போலவே, அதிகத் தொகை கிடைக்கும் நிலைகளிலும் குறைந்த செயல்திறனோடுதான் விளையாடினர்.
வளரிளம் பருவம் முழுவதும் மூளையின் நரம்புகள் இணைக்கப்படுவது தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த முடிவுகள் காட்டுவதாக கேட்டி கூறுகிறார்.
பதின்ம வயதில் பங்குபெறும் ஊக்க மூட்டும் போட்டிகள் முழுவதும் மூளை இணைப்பை நன்றாகவே சரிசெய்வதாகத் தெரிகிறது. இது உயர் மதிப்புடைய குறிக்கோளை நோக்கி முயற்சி எடுக்கிறபோது நன்றாகச் செயல்படுபவர்களாக அவர்களை மாற்றுகிறது.
வளர்ச்சியடையும் மூளையின் வேறுபட்ட பகுதிகள் அவற்றின் இணைப்புகளை உருவாக்கிக்கொள்ள பல ஆண்டுகள் எடுப்பதை கடந்த கால ஆய்வுகள் காட்டுகின்றன.
திட்டமிடல், உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்துதல் மற்றும் அனுதாபம் போன்ற விஷயங்களுக்குப் பொறுப்பான முன்தலை புறணி என்கிற பிரிபிரன்டல் கார்டெக்ஸ்தான் மூளையின் பாகங்களிலேயே கடைசியாக முதிர்ச்சி அடையும் பகுதி ஆகும்.
பதின்ம வயதினர் எனப்படும் டீனேஜ் பருவத்தினர் பணத்தை விரும்பாததற்கும், மூளை முதிர்ச்சி அடையாமல் இருப்பதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் தொடர்பாக யோசித்து முடிவெடுப்பதில் வயதுவந்தோர் சிறந்தவர்களாக உள்ளனர்.
ஆனால், பதின்ம வயதினரின் மூளை நரம்புகள் வளர்முக நிலையில்தான் இருக்கின்றன. எனவே அவர்கள் தங்களின் குறிக்கோள்களை கையாளுவது கடினமாக அமைகிறது என்று அமெரிக்க உளவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பணத்தை வைத்து மாணவர்களின் தர நிலைகளை மேம்படுத்தும் முயற்சிகள், வெற்றி- தோல்வி இரண்டையும் வழங்கியிருக்கின்றன.
Related Tags :
Next Story